Saturday, April 14, 2007

Spize Boyz 2 - நான் சென்னை வந்து சேர்ந்த கதை.........

நான் பிறந்தது "ஆண்டவன் படைச்சான்...எங்கிட்ட கொடுத்தான்...அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்" என்று பாடத்தோனுகிற ஒரு அருமையான கிராமம். ஆத்தங்கரையும், பஞ்சாயத்து செய்ய ஆலமரமும் இல்லாவிட்டாலும் அழகாயிருக்கும் அமைதியான கிராமம். அன்போடு அரவணைத்துக்கொள்ளும் பெற்றொர், அடிக்கடி சண்டை போட்டாலும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் அக்கா என்று குறையில்லா குழந்தைப் பருவம் கிடைத்த அதிர்ஷ்டசாலி நான். கேட்டதெல்லாம் கிடைத்ததனாலேயோ என்னமோ... நமக்கு தெனாவெட்டும்,ஆர்வக்கோளாரும் கொஞ்சம் அதிகம். 10ஆம் வகுப்புவரை உள்ளுரிலேயே படித்ததால், பட்டணத்தில் சென்று படிக்கவேண்டும் என்ற ஆசை என்னை தொத்திக்கொண்டது. முதல்கட்டமாக வீட்டில் அடம்பிடித்து சுமார் 45 கி.மீ தொலைவிலுள்ள அமலா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். வீட்டின் கடைக்குட்டி என்பதால் ஹாஸ்டலில் சேர்க்க எனது பெற்றோர் மறுத்துவிட்டதால் எனது ஆசை பணால் ஆனது. ஒவ்வொரு நாளும் மூன்று பஸ் மாறி 90 கி.மீ பயணம் செய்து படித்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

12ஆம் வகுப்பு முடிந்தவுடன் எனது ஓரே குறிக்ககோள் சென்னையில் படிப்பது என்பதுதான். பொதுத்தேர்விலும், நுழைவுத்தேர்விலும் ஓரளவிற்கு மார்க் எடுத்திருந்ததால் பொறியியலில் சேர வீட்டில் ஒருமுகமாக முடிவு செய்யப்பட்டது. எனது பாட்டி மட்டும் "டாக்டர் ஆகிறேன்னு சொல்லிட்டு இப்ப கட்டடம் கட்ட போறியேடா பேராண்டி" என்று சோகத்தோடு கேட்டது இன்றுவரை ஞாபகம் இருக்கிறது. முதலில் நானும் அப்பாவும் மட்டுமே செல்வதாக இருந்தது, அதிக பாசத்தில் உள்ளுரிலேயே சேர்த்துவிடுவாரோ என்று பயந்து, அடிக்கடி பிஸினஸ் விஷயமாக சென்னை போய் வரும் எனது சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு மூவருமாக சென்னை வந்து சேர்ந்தோம்.

அலைபாயுதே பார்த்தபோதே படித்தால் மாதவனை போல கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்தான் படிப்பது என்று முடிவு செய்திருந்தேன். கவுன்சிலிங்கிற்கு நான்காவது நாள்தான் சென்றேன் என்பதால் பிரபலமான கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் ECE, Mechanical, Civil போன்ற குரூப்களே கிடைத்தது. இறுதியில் கோயம்புத்தூரில் உள்ள PSG ,CIT ஆகிய இரண்டில் எதோ ஒன்றில், சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் சேர்ப்பது என்று முடிவு செய்தனர். என்னடா இது! நாம பாத்திகட்டி வளர்த்த கனவையெல்லாம் காரம் போட்டு சூப் வைத்து குடித்துவிட்டார்களே என்று கதிகலங்கி போய்விட்டேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தபோது அருகில் உட்கார்ந்திருந்த பையன் சென்னையில் புகழ்பெற்ற S.R.M குழுமத்தின் புதிய கல்லூரியான வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் I.T பிரிவில் சேரப்போவதாக சொல்லி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். எங்களுக்கு அழைப்பு வர மதியம் ஆகிவிட்டதால் சோர்வு காரணமாக சித்தப்பாவை அழைத்துக்கொண்டு சென்று வருமாறு எனது அப்பா கூறிவிட்டார். உள்ளே சென்ற பின்னர் PSGஇல் மெக்கானிக்கல் இருந்தபோதும் வள்ளியம்மை கல்லூரி பற்றி விசாரித்தேன். கல்லூரி பற்றி நல்லவிதமாக சொன்னதுடன் Computer Scienceஇல் சீட் வேறு இருப்பதாகச் சொன்னார். அதுவும் அந்த கல்லூரியின் இலவசப்பிரிவில் முதலாவது சீட் என்பதால் என் சித்தப்பாவும் ஒத்துக்க்கொண்டார். நீண்டநாள் கனவு நிறைவேறிய சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருந்த எனக்கு, அதே கல்லூரியின் சரித்திர நாயகர்களான மேட்டர், ஜட்டி, ஜெஸ், மொக்கை போன்றவர்களோடு ஒருவனாக ஆகப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.

இப்படியாக ஆயிரம் தடைகளைத்தாண்டி சென்னை வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவிற்கு முதலில் வருத்தமாக இருந்தபோதும் பையன் ஆசை படுகிறானே என்று சரி சொல்லிவிட்டார். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் கல்லூரி ஹாஸ்டலுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்தேன். முதல் முறையாக பிரிவதால் வரும்வழி முழுதும் என் அம்மா அழுது கொண்டே வந்தார்கள். அப்போது அவர்களுக்கு சமாதானம் சொல்லிவந்த நான் ,ஊருக்கு திரும்பிச்செல்வதற்காக அவர்கள் கிளம்பியபோது என்னையறியாமல் அழுது விட்டேன். வாழ்க்கையிலேயே முதல்முறையாக "தப்பு செய்ய்துவிட்டேனோ" என்று எண்ணி அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

அப்போதுதான் "தம்" கார்த்தியை சந்தித்தேன் (கார்த்தி என்ற பெயரில் மூன்றுபேர் இருந்ததனால் அடையாளத்திற்காக இந்த பெயர். மற்ற இருவர் "கிரிமினல்" கார்த்தி மற்றும் "சைக்கோ" கார்த்தி ஆவர்). அறிமுகம் முடிந்த பின்னர், இப்படி தனியாக இருந்தால் சோகமாத்தான் இருக்கும், வெளியே போய் ஒரு தம் (பஞ்சு வச்ச வெள்ளை பீடி தாங்க) போட்டுட்டு வரலாம் வா என்று கூப்பிட்டான். எனக்கு அந்த பழக்கம் இல்லையென்றாலும் சரி வாடா போகலாம் என்று ஒரு ரவுண்டு சுற்றி வந்த பின்னர்தான் நிம்மதியாக தூங்கினேன். இப்படியாக என்னுடைய சென்னையின் முதல்நாள் அனுபவம் சோகத்துடன் முடிந்தது. ஆனால் அதற்குப் பின்னால் "சோகம் என்றால் என்ன?" என்று கேட்கும் வகையில் பல சந்தோஷமான அனுபவங்கள் வரும் என அன்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.....


தொடரும்.......

Thursday, April 12, 2007

Spize Boyz the Great - ஒரு அறிமுகம்.....

பேரன்புமிக்க வலைப்பதிவு உலக பெருமக்களுக்கு எங்கள் Spize Boyz சார்பாக முதல் வணக்கமுங்கோ!!!!

நமக்கு என்று ஒரு வலைப்பதிவு இல்லையென்றால் வருங்கால சந்ததிகளுக்கு நம் குழுவைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் தெரியாமல் போய் விடுமே!! என்று எங்களது மூத்த உறுப்பினர் திரு. ஜட்டி ஆதங்கப்பட்டதன் விளைவால் உதயமானதுதான் இந்த வலைப்பதிவு.
எங்கள் குழு உருவானது தாம்பரத்திற்கு(சென்னை) அருகில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில்தான். அது இன்று பிரிந்து மும்பாய், குஜராத், பெங்களுரூ மற்றும் அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், துபாய் என உலகெங்கிலும் சிதறியிருந்தாலும் எங்களது பொற்கால நினைவுகளை இப்போதும் நாங்கள் அசை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த நினைவுகளை உங்களோடும் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

முதலில் எங்களைப் பற்றி ஒரு அறிமுகம், அதன் பின்னர் எங்கள் கதையை ஆரம்பிக்கிறேன்.......

1. முதலில் முருகன், இவன் சொந்த ஊர் தாரமங்கலம் என்றாலும் அவனது அப்பா குடும்பத்தொடு சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். நன்றாகப் படித்தாலும் தில்லாலங்கடி வேலைகளில் பெரிய ஆளாக இருந்ததனால் "மேட்டர் முருகன்" என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டான் (எந்த விஷயமாக இருந்தாலும் அவன் "மச்சீ ஒரு மேட்டர் ஆயிடுச்சிடா" என்று ஆரம்பிப்பதும் ஒரு காரணம்). நாங்கள் மட்டும் அவனது ஓவர் வெயிட் காரணமாக "குண்டா" என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.

2. அடுத்தது சீனிவாசன், இவன் காரைக்குடிக்காரன். கல்லூரியில் சேர்ந்த புதிதில் கோடை வெய்யில் காரணமாக ஹாஸ்டலில் இரவில் ஜட்டி மட்டுமே அணிந்து வலம் வந்தவன். முதலில் "ஜட்டி சீனிவாசன்" என்று அழைக்கப்பட்டு பின்னர் "ஜட்டி" என்பதே அவனது பெயராக நிலைத்துவிட்டது. இப்பொழுது கூட ஜட்டி என்று கூப்பிட்டால்தான் திரும்புவான். சீனி என்று கூப்பிட்டால் வேறு யாரையோ என்று கண்டுகொள்ளமட்டான். எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் டென்சனே ஆகமாட்டான். அதே போல எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டான் (அப்படியே வைத்துக்கொண்டாலும் எங்களை ஏதும் செய்யமுடியாது என்பது வேறு விஷயம்). இவன் சிரிக்க ஆரம்பித்தால் எளிதில் நிறுத்தமாட்டான்... இவன் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்து நாங்களும் சிரிக்க ஆரம்பித்து இரவு முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தது பல முறை நடந்திருக்கிறது.....

3. அடுத்தது ஜெஸ் (Salvius Jess), இவன் திருநெல்வேலிக்காரன். பள்ளியில் படிக்கும்போதே அனைத்து கேப்மாரித்தனங்களையும் கற்றுத் தேர்ந்தவன். மேட்டரான விஷயங்களை பிளான் போட்டு பக்காவாக பண்ணுவதில் இவனை அடித்துகொள்ள ஆளே இல்லை.

4. அடுத்த பெரிய தலை பாரதி, இவன் தூத்துக்குடிக்காரன். எங்கள் குரூப்பிலேயே mature ஆன ஆள் இவந்தான். எந்த விஷயமாக இருந்தாலும் அதன் விளைவுகளை யோசித்துதான் செய்வான். Cricket, Football, Chess என்று அனைத்து விளையாட்டிலும் முதலாவதாக வருவான். ஆனாலும் பயபுள்ளைக்கு கொஞ்சம் சோம்பேரித்தனம் அதிகம். முதல் நாள் சாயங்காலம் தூங்க ஆரம்பித்தால் அடுத்தநாள் இரவுதான் கண் விழிப்பான் (அதுவும் சாப்பிடுவதற்கு). அதனாலேயே "பன்னி" என்று நாங்கள் செல்லமாக அழைப்பதுண்டு.

5. அடுத்த அறிமுகம் இளநி (சரவணன்). புதுக்கோட்டையில் இருந்து வந்த வில்லங்கமான அப்பாவி இவன். ஆள் பார்வைக்கு தனுஷ் போல இருந்தாலும் தலையில் கொஞ்சம் முடி கம்மி. "வழுக்கையா ஒரு இளநி குடுடா" என்று கிண்டல் செய்தே இறுதியில் "இளநி" என்ற பெயரே நிலைத்தது. நன்றாக சமையல் செய்வான், ஆனாலும் அடிக்கடி அப்பாவித்தனமான கேள்விகள் கேட்டு எங்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதில் அவனுக்கு நிகர் அவனே.

6. அடுத்தது மொக்கைச்சாமி எ மொக்கை (முத்துசாமி). இவனது சொந்த ஊர் சேலத்திற்கு அருகில் உள்ள ஜோஸியர்காடு. அப்பாவித்தனமாக மொக்கை போடுவதில் பெரிய ஆள். அவனைப் பார்த்தாலே மொக்கை போட வந்துட்டான் என்று அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். அவன் பட்டபெயரே இறுதியில் அவன் பெயரானது.

7. இப்போ காளிராஜன், பன்ருட்டியிலிருந்து வந்தாலும் Titanic ரேஞ்சுக்கு தாம்பரம் தாடகையை ரூட் விட்டதனால இவனோட பட்டபெயர் "Jack காளி" என்றாகிவிட்டது. பாட்ஷா படத்தில வரமாதிரி இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கு(அதை அப்பால சொல்றேன்).

8. அடுத்த ஸ்பெஷல் எங்க "நாயர்". பெயரைப் பார்த்து கேரளாக்காரன் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். அசல் ஐயரான இவன் எங்கள் ஜோதியில் ஐக்கியமான பின்னர் அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் இரவு லோக்கல் பாயா கடையில் நாய்கறியையும் பதம் பார்த்துவிட்டான்(அது நாய் என்பது அவனுக்கு தெரியாது). எனவே நாய்கறி ஐயர் என்று அழைத்து அழைத்து நாயர் ஆகிவிட்டான்(சில நேரங்களில் அந்த நன்றியுள்ள பிராணியின் பெயராலும் அழைக்கப்படுவது வழக்கம்).

9. அடுத்தது எங்கள் "பாப்பா". பெயர் Sumit, குஜராத்திக்காரனாக இருந்தாலும் சின்ன வயதில் இருந்தே தேனியில் வளர்ந்ததால் தமிழ் நன்றாக தெரியும். கல்லூரியில் பாப்பாக்களை கரெக்ட் பண்ணுவதில் எங்கள் பாப்பாவிற்கு நிகர் அவனேதான்.

10. அடுத்தது நிசார் அஹமது எ "பாய்". நாலு வருட கல்லூரி வாழ்க்கையில் எங்களுக்கு சப்பாடு போட்ட நவீனகால வள்ளல் (பேருக்கு அக்கவுண்டு வச்சிருந்தாலும் pay பண்ணுவது எங்கள் இஷ்டப்படிதான்). அதற்காக நாங்கள் அவனுடைய மொக்கை ஜோக்குகளையும், பிரேக் டான்ஸ் ஆடுகிறேன் என்று கன்னுக்குட்டி போல குதிப்பதை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது வேறு கதை. இருந்தாலும் ஒரு சகோதரன் போலவே இன்று வரை எங்கள் கூட இருப்பவன்.

11. அடுத்தது எங்கள் சுனா-பானா ராஜேஸ் பிரபு. எங்கள் செட்டிலேயே கலகலப்பான ஆள். அவன் அடிக்கும் ஜோக்குகளுக்கும், தெரியாத விஷயங்களில் அப்பீட்டு அடிக்கும் ஸ்டைலையும் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது.டென்சன் ஆகிவிட்டால் அளவுக்கு மீறி கத்துவதைப் பார்த்து அவனுக்கும் "சைக்கு" என்று யாரோ பெயர் வைத்து விட்டனர். அப்படி அவனை அழைக்கும் பழக்கம் இன்றளவும் எங்களிடையே தொடர்கிறது. எங்களது முதல் பஞ்ச் டயலாக்கை எழுதியதும் அவந்தான்.


"இந்த அல்போன்ஸு, ஜில்பான்ஸு, கில்மா, ஜிகிரிடப்பா தகரடப்பா பங்காரப்பா,சிமிலி, பப்பிலி, டோங்கு டொர்ரி டுஸ்ஸு இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது.எங்களுக்கு பிடிச்சது எல்லாம் கில்லு, கெத்து, தில்லு"


இறுதியாக நான் (பன்னீர்செல்வம்), சொந்த ஊர் சேலம். நமக்கெல்லாம் அப்பவே MNC'ல வேலை செய்வது போல ஒரு மிதப்பு. தூங்கும்போது கூட டை கட்டி, இன்சர்ட் செய்து கொண்டு லந்து விட்டதை பார்த்த எங்க பாசக்கார புள்ளைக எனக்கும் "Officer" என்று பெயர் வைத்து ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டனர். அப்பாடா ஒரு வழியாக அறிமுகம் முடிந்துவிட்டது. நாங்கள் எப்படி சந்தித்தோம், Spize Boyz எப்படி கல்லூரியையே கலங்கடித்தது என்பது இனி வரும் பதிவுகளில் தொடரும்.....