Saturday, April 14, 2007

Spize Boyz 2 - நான் சென்னை வந்து சேர்ந்த கதை.........

நான் பிறந்தது "ஆண்டவன் படைச்சான்...எங்கிட்ட கொடுத்தான்...அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்" என்று பாடத்தோனுகிற ஒரு அருமையான கிராமம். ஆத்தங்கரையும், பஞ்சாயத்து செய்ய ஆலமரமும் இல்லாவிட்டாலும் அழகாயிருக்கும் அமைதியான கிராமம். அன்போடு அரவணைத்துக்கொள்ளும் பெற்றொர், அடிக்கடி சண்டை போட்டாலும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் அக்கா என்று குறையில்லா குழந்தைப் பருவம் கிடைத்த அதிர்ஷ்டசாலி நான். கேட்டதெல்லாம் கிடைத்ததனாலேயோ என்னமோ... நமக்கு தெனாவெட்டும்,ஆர்வக்கோளாரும் கொஞ்சம் அதிகம். 10ஆம் வகுப்புவரை உள்ளுரிலேயே படித்ததால், பட்டணத்தில் சென்று படிக்கவேண்டும் என்ற ஆசை என்னை தொத்திக்கொண்டது. முதல்கட்டமாக வீட்டில் அடம்பிடித்து சுமார் 45 கி.மீ தொலைவிலுள்ள அமலா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். வீட்டின் கடைக்குட்டி என்பதால் ஹாஸ்டலில் சேர்க்க எனது பெற்றோர் மறுத்துவிட்டதால் எனது ஆசை பணால் ஆனது. ஒவ்வொரு நாளும் மூன்று பஸ் மாறி 90 கி.மீ பயணம் செய்து படித்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

12ஆம் வகுப்பு முடிந்தவுடன் எனது ஓரே குறிக்ககோள் சென்னையில் படிப்பது என்பதுதான். பொதுத்தேர்விலும், நுழைவுத்தேர்விலும் ஓரளவிற்கு மார்க் எடுத்திருந்ததால் பொறியியலில் சேர வீட்டில் ஒருமுகமாக முடிவு செய்யப்பட்டது. எனது பாட்டி மட்டும் "டாக்டர் ஆகிறேன்னு சொல்லிட்டு இப்ப கட்டடம் கட்ட போறியேடா பேராண்டி" என்று சோகத்தோடு கேட்டது இன்றுவரை ஞாபகம் இருக்கிறது. முதலில் நானும் அப்பாவும் மட்டுமே செல்வதாக இருந்தது, அதிக பாசத்தில் உள்ளுரிலேயே சேர்த்துவிடுவாரோ என்று பயந்து, அடிக்கடி பிஸினஸ் விஷயமாக சென்னை போய் வரும் எனது சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு மூவருமாக சென்னை வந்து சேர்ந்தோம்.

அலைபாயுதே பார்த்தபோதே படித்தால் மாதவனை போல கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்தான் படிப்பது என்று முடிவு செய்திருந்தேன். கவுன்சிலிங்கிற்கு நான்காவது நாள்தான் சென்றேன் என்பதால் பிரபலமான கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் ECE, Mechanical, Civil போன்ற குரூப்களே கிடைத்தது. இறுதியில் கோயம்புத்தூரில் உள்ள PSG ,CIT ஆகிய இரண்டில் எதோ ஒன்றில், சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் சேர்ப்பது என்று முடிவு செய்தனர். என்னடா இது! நாம பாத்திகட்டி வளர்த்த கனவையெல்லாம் காரம் போட்டு சூப் வைத்து குடித்துவிட்டார்களே என்று கதிகலங்கி போய்விட்டேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தபோது அருகில் உட்கார்ந்திருந்த பையன் சென்னையில் புகழ்பெற்ற S.R.M குழுமத்தின் புதிய கல்லூரியான வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் I.T பிரிவில் சேரப்போவதாக சொல்லி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். எங்களுக்கு அழைப்பு வர மதியம் ஆகிவிட்டதால் சோர்வு காரணமாக சித்தப்பாவை அழைத்துக்கொண்டு சென்று வருமாறு எனது அப்பா கூறிவிட்டார். உள்ளே சென்ற பின்னர் PSGஇல் மெக்கானிக்கல் இருந்தபோதும் வள்ளியம்மை கல்லூரி பற்றி விசாரித்தேன். கல்லூரி பற்றி நல்லவிதமாக சொன்னதுடன் Computer Scienceஇல் சீட் வேறு இருப்பதாகச் சொன்னார். அதுவும் அந்த கல்லூரியின் இலவசப்பிரிவில் முதலாவது சீட் என்பதால் என் சித்தப்பாவும் ஒத்துக்க்கொண்டார். நீண்டநாள் கனவு நிறைவேறிய சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருந்த எனக்கு, அதே கல்லூரியின் சரித்திர நாயகர்களான மேட்டர், ஜட்டி, ஜெஸ், மொக்கை போன்றவர்களோடு ஒருவனாக ஆகப்போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.

இப்படியாக ஆயிரம் தடைகளைத்தாண்டி சென்னை வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவிற்கு முதலில் வருத்தமாக இருந்தபோதும் பையன் ஆசை படுகிறானே என்று சரி சொல்லிவிட்டார். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் கல்லூரி ஹாஸ்டலுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்தேன். முதல் முறையாக பிரிவதால் வரும்வழி முழுதும் என் அம்மா அழுது கொண்டே வந்தார்கள். அப்போது அவர்களுக்கு சமாதானம் சொல்லிவந்த நான் ,ஊருக்கு திரும்பிச்செல்வதற்காக அவர்கள் கிளம்பியபோது என்னையறியாமல் அழுது விட்டேன். வாழ்க்கையிலேயே முதல்முறையாக "தப்பு செய்ய்துவிட்டேனோ" என்று எண்ணி அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

அப்போதுதான் "தம்" கார்த்தியை சந்தித்தேன் (கார்த்தி என்ற பெயரில் மூன்றுபேர் இருந்ததனால் அடையாளத்திற்காக இந்த பெயர். மற்ற இருவர் "கிரிமினல்" கார்த்தி மற்றும் "சைக்கோ" கார்த்தி ஆவர்). அறிமுகம் முடிந்த பின்னர், இப்படி தனியாக இருந்தால் சோகமாத்தான் இருக்கும், வெளியே போய் ஒரு தம் (பஞ்சு வச்ச வெள்ளை பீடி தாங்க) போட்டுட்டு வரலாம் வா என்று கூப்பிட்டான். எனக்கு அந்த பழக்கம் இல்லையென்றாலும் சரி வாடா போகலாம் என்று ஒரு ரவுண்டு சுற்றி வந்த பின்னர்தான் நிம்மதியாக தூங்கினேன். இப்படியாக என்னுடைய சென்னையின் முதல்நாள் அனுபவம் சோகத்துடன் முடிந்தது. ஆனால் அதற்குப் பின்னால் "சோகம் என்றால் என்ன?" என்று கேட்கும் வகையில் பல சந்தோஷமான அனுபவங்கள் வரும் என அன்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.....


தொடரும்.......

No comments: